நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு; விவசாயிகள் சங்கத்தினர் புகார் மனு
விழுப்புரம் : அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகளை தடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் அய்யனார் தலைமையில் கொடுத்துள்ள மனு: கடந்த 2024-25ம் ஆண்டு சம்பா பயிர் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீடு வழங்கிட வேண்டும். தற்போது சம்பா நடவு மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு யூரியா தட்டுபாடு உள்ளது. தட்டுபாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன் நீர்நிலை வரத்து வாய்க்கால்களை துார்வார வேண்டும். வானுார் அடுத்த புதுக்குப்பம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க வேண்டும். வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் சம்பா பருவ நெல் விதைகள் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு எந்த நிபந்தனையுமின்றி மாநில பதிவாளர் உத்தரவின்பேரில் பயிர்கடன் மற்றும் சவுக்கு பயிருக்கு சேர்த்து பயிர்கடன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.