உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தர்பூசணி பயிருக்கு நஷ்ட ஈடு கேட்டு விவசாயிகள் புகார்: குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் மீது சரமாரி புகார்

தர்பூசணி பயிருக்கு நஷ்ட ஈடு கேட்டு விவசாயிகள் புகார்: குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் மீது சரமாரி புகார்

திண்டிவனம்: தர்பூசணிக்கு நஷ்ட ஈடு, பயிர் காப்பீட்டு தொகை மற்றும் பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்கவில்லை என சப் கலெக்டர் தலைமையில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம், சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், சப் கலெக்டர் திவ்யான்சு நிகம் தலைமையில் நடந்தது.சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், தாசில்தார் யுவராஜ், வல்லம் வேளாண் உதவி இயக்குநர் சரவணன், ஒலக்கூர் விஜயசந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மற்றும் புகார் குறித்து பேசியதாவது:பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலருக்கு நிவராணம் கிடைக்கவில்லை. விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். தர்பூசணி குறித்து, உணவுத்துறை அதிகாரிகளால் தவறான தகவலால் நஷ்டமடைந்த தர்பூசணி விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க நடவடக்கை எடுக்கவேண்டும்.சொட்டு நீர் பாசனத்திற்கு அரசு சார்பில் இரண்டரை இன்ச் பைப் வழங்குவதால் பைப் உடைகிறது. வரும் காலத்தில் 3 இன்ச் பைப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின்கம்பிகள் காற்று அடிக்கும்போது அறுந்து விழுகிறது. இதனால் மனிதர்கள், கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. புதிதாக மின்கம்பிகள் அமைக்க வேண்டும்.நீர் நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் கூறியும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராம சபை கூட்டம் குறித்து 7 நாட்களுக்கு முன் தகவல் தெரிவிப்பதில்லை.பெஞ்சல் புயலால் பாதித்த பல விவசாயிகளுக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கவில்லை. பாதிப்பு குறித்து விபரங்களை விவசாயிகள் கொடுத்தால், அந்த பைலையே காணவில்லை என அதிகாரிகள்கூறுகின்றனர்.நிவாரணம் விரைவில் வழங்கவில்லை என்றால் சப் கலெக்டர் கார் முன் படுத்து போராட்டம் நடத்த வேண்டி வரும். செஞ்சியிலுள்ள மார்க்கெட் கமிட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. திண்டிவனம் சப்கலெக்டர் அலுவலகத்தில் தர்பூசணி விளைவித்த 500 விவசாயிகள் நஷ்ட ஈடு வழங்க கோரி மனு கொடுத்தும், இதுவரை நஷ்டஈடு வழங்கவில்லை. நஷ்ட ஈடு வழங்குவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு வீடு வழங்கும் திட்டத்தில், வீடு இல்லாதவர்களுக்கு கொடுக்காமல் வீடு இருப்பவர்களுக்கே கொடுக்கின்றனர்.வல்லம் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளாகியும், பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் உள்ளது. கிராமங்களில் ஏரி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அனுப்பினால், திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் பதில் அனுப்புவதில்லை. வல்லம் ஒன்றியத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் முறையாக செயல்படவில்லை என விவசாயிகள் பேசினர். அனைத்து புகார் குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சப் கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி