அறுக்கவும் முடியாமல், விதைக்கவும் முடியாமல் மேல்மலையனுார் விவசாயிகள் 23 நாட்களாக அவதி
செஞ்சி: மேல்மலையனுார் பகுதியில் பெஞ்சல் புயலின் போது ஏற்பட்ட வெள்ளம் 23 நாட்களை கடந்த பிறகும் வடியாமல் விவசாய நிலங்களில் தணணீர் தேங்கி இருப்பதால் சேதமான பயிர்களை அறுக்கவும் முடியாமல், புதிதாக விதைக்கவும் முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.பெஞ்சல் புயின் போது கடந்த மாதம் இறுதியிலும், இம்மாதம் துவக்கத்திலும் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏரிகள் நிரம்பின, ஓடைகளிலும், ஆறுகளிலும் வெள்ள்பபெருக்கு ஏற்பட்டது.ஏரிகள் நிரம்பியதுடன் அதன் கீழ் உள்ள நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. பல இடங்களில் ஏரிகள் உடைந்து பயிர்களை சேதப்படுத்தியது. ஓடைகளில் மழை நின்று பல நாட்களுக்கு மழை வெள்ளம் நீடித்து வருகிறது.மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அத்துடன் மானாவாரி வேர்கடலை, உளுந்து பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கின.மேல்மலையனுார் தாலுகாவில் கோவில்புறையூர், நொச்சலுார், எய்யில், தோப்பு, செவலபுரை, வடபாலை, சிறுவாடி, மேலச்சேரி, சொக்கனந்தல், ஆத்திப்பட்டு, களத்தம்பட்டு உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான நெல், வேர்கடலை பயிர்களில் வெள்ளம் புகுந்தது.இதில் ஓடை, ஏரி, குளங்களுக்கு அருகில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மழை நின்று 23 நாட்களை கடந்த பிறகும் தரை ஊற்றெடுத்து தண்ணீர் வழிந்து வருகிறது.இதனால் விளைந்து தரையில் சாய்ந்த நெல் மற்றும் வேர்கடலை பயிர்களை அகற்றவும் முடியாமல், புதிதாக விதைக்கவும் முடியாமால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலங்களில் தண்ணீர் வழிந்து செல்வது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.அதிக அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேல்மலையனுார் தாலுகாவில் வெள்ளம் பாதிக்கவில்லை என தவறான அறிக்கையை வருவாய்த்துறையினர் அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். இதனால் இந்த தாலுகா முழுமைக்கும் அரசின் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை.தற்போதுள்ள நிலையில் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு பதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும், மறு சாகுபடி செய்வதற்கு தேவையான நிதி உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.