விதிமீறிய 26 ஓட்டல்களுக்கு அபராதம் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
விழுப்புரம்: விழுப்புரத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திய 21 ஓட்டல்களுக்கு அபராதம் விதித்தனர்.விழுப்புரத்தில் கடைகள் மற்றும் ஓட்டல்களில் சாப்பாட்டு பார்சலுக்கும், சாப்பிடும் இலை, குடிநீர் கப்புகள் என தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு, புகார்கள் வந்தன.இதனையடுத்து, கலெக்டர் பழனி உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில், அலுவலர்கள் ஸ்டாலின், கொளஞ்சி, சண்முகம், பாஸ்கரன் குழுவினர், நேற்று மதியம் 1:00 மணி முதல் விழுப்புரம் நகரில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் தொடங்கி திரு.வி.க.வீதி, செஞ்சி ரோடு, கிழக்கு பாண்டி ரோடு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், மெஸ்கள், சாலையோர உணவகங்கள், சிறிய மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.மாலை 6:00 மணி வரை நடந்த ஆய்விற்குப்பின், ஓட்டல்கள், சிறிய உணவகங்கள், பிரியாணி கடைகளில், தடை செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு பொட்டலங்கள் பார்சல் செய்வதற்கு பயன்படுத்திய 150 கிலோ பிளாஸ்டிக் பேப்பர்கள், இலைகள், பார்சல் கவர்களை பறிமுதல் செய்தனர்.இந்த ஆய்வின்போது, விழுப்புரத்தில் 26 கடை உரிமையாளர்களுக்கு தலா 2,000 ஆயிரம் முதல் 5,000 ரூபாய் என மொத்தம் 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.மேலும், 26 கடைகளுக்கும் முதல் முறை என்பதால் எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விதிமீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தினால், கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.