மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு
26-Mar-2025
திண்டிவனம்: திண்டிவனம் வனத்துறை மூலம் 27 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் விவசாய நிலங்களாகவும், வனப்பகுதிகளாகவும் உள்ளன. ஒரு பக்கம் விவசாயிகள் பயிரிட்டு வந்தாலும், மற்றொரு பக்கம் வனப்பகுதிகள் அழிந்து வருகிறது.கடந்த காலங்களில் வனப்பகுதிகளில் அதிகளவில் மரங்கள் இருந்தன. நாளடைவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. சொற்ப அளவிலான மரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.பருவம் தவறிய மழையால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மரங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு விவசாயிகளுக்கு இலவச மரக்கன்கறுகளை வழங்கி, மரங்கள் வளர்ப்புக்கான திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறது.திண்டிவனம் வனத்துறை மூலம் பல்லுயிர் பெருக்க மேலாண்மைத் திட்டம், பசுமை தமிழக திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.முதல் கட்டமாக பல்லுயிர் பெருக்க மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 19 ஆயிரம் மரக்கன்றுகள், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 8,000 மரக்கன்றுகள் என மொத்தம் 27 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.திண்டிவனம் வனத்துறை மூலம், மரக்காணம் பகுதியில் நாற்றங்கால் விடப்பட்டுள்ளது. இதில் தேக்கு, செம்மரம், புங்கன், நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆயிரம் மரக்கன்றுகள், 16க்கு 30 செ.மீ., கொண்ட பாலித்தீன் பைகளிலும், 8000 மரக்கன்றுகள் 30க்கு 45 செ.மீ., கொண்ட பாலித்தீன் பைகளிலும் நட்டு பராமரிக்கப்படுகிறது.இந்த மரக்கன்றுகளை நர்சரிகளில் வாங்கினால், குறைந்தது 50 ரூபாய் முதல் அதிக பட்சமாக 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வனத்துறை மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ள இந்த மரக்கன்றுகளை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம். மரக்கன்றுகளை நட்டு சரியாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது. ஒரு ஏக்கருக்கு 250 கன்றுகள் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள், கல்வி நிறுவனங்கள் ஆதார் நகல், சிட்டா பட்டா, வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து, திண்டிவனம் வனச்சரகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், திண்டிவனம் வனத்துறை அலுவலகம், 04147 250656 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விபரங்களைக் கேட்டறியலாம் என வனச்சரக அலுவலர் புவனேஷ் தெரிவித்துள்ளார்.
26-Mar-2025