கள நிலவரம் முதல்வருக்கு தெரியவில்லை மாஜி அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு
விழுப்புரம் : 'அரசு அலுவலர்கள் தங்கள் கடமையை முழுமையாக செய்ய வேண்டும்' என முன்னாள் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.விழுப்புரம் நகராட்சி திடலில் அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:பெஞ்சல் புயல் காரணமாக, கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. திருமண மண்டபத்திற்கு மக்களை வரவழைத்து, நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு சென்றனர்.சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. அதேபோல், விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்ட மக்களுக்கும், ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.தமிழகத்தில் என்ன நடக்கிறது என முதல்வருக்கு தெரியவில்லை. ஒரு சில அதிகாரிகள் கூறுவதை முழுக்க முழுக்க நம்பி, முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார்.கள நிலவரத்தை முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி வரும், போகும். அதே நேரத்தில் அலுவலர்கள் தங்கள் கடமையை முழுமையாக செய்ய வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் முதல் வி.ஏ.ஓ.,க்கள் வரையிலான அலுவலர்கள் யாரும் முறையாக சென்று ஆய்வு செய்யவில்லை.தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மூன்று மாவட்டங்களில் அதிக வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.இவ்வாறு சண்முகம் பேசினார்.