உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெள்ளம் சூழ்ந்ததற்கு கோமா அரசே காரணம் மாஜி அமைச்சர் சண்முகம் காட்டம்

வெள்ளம் சூழ்ந்ததற்கு கோமா அரசே காரணம் மாஜி அமைச்சர் சண்முகம் காட்டம்

விழுப்புரம் : 'விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தால் மூழ்கியதற்கு முக்கிய காரணம், திட்டமிடல் இல்லாத ஸ்டாலின் அரசுதான்' என முன்னாள் அமைச்சர் சண்முகம் குற்றம் சாட்டினார்.விழுப்புரம் பகுதியில் கன மழையால் பாதித்த மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கி, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:புயல் கரையைக் கடந்து 3 நாட்கள் ஆகிறது. விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை உட்பட வட மாவட்டங்கள் முழுவதும் புயலால் பாதித்துள்ளன. இதில், விழுப்புரம் மாவட்டம் முழுதும் தண்ணீரால் தத்தளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்ற பின்னரும், மாவட்டத்தில் தற்போது வரை எங்கேயாவது ஓரிடத்தில் கூட பாதித்த மக்களை காக்க அதிகாரிகள் மீட்பு பணி செய்யவில்லை.சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை இல்லை. நிர்வாகம் முற்றிலுமாக செயலிழந்து உள்ளது. நிர்வாகத்தை எடுத்து நடத்த வேண்டிய அரசு முற்றிலுமாக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசிடம் திட்டமிடல் இல்லை. சென்னையில் போட்டோ ஷூட் எடுத்தது போல, முதல்வர் இங்கு வந்தார், பார்த்தார், இருவருக்கு நிவாரணம் வழங்கி விட்டு சென்று விட்டார்.விழுப்புரம், கடலுார் மாவட்டம் வெள்ளத்தால் சூழ காரணம், புயல் மட்டுல்ல, முதல்வர் ஸ்டாலின் அரசிடம் சரியான திட்டமிடல் இல்லாதது தான் காரணமாக உள்ளது.மக்களுக்கு அபாய எச்சரிக்கை கொடுக்காமல் சாத்தனுார் அணை தண்ணீரை திறந்து விட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் உடைக்கப்பட்டு, வடமாவட்டம் ஒரு தனி தீவாக மாறியுள்ளது.வெள்ளத்தில் சிக்கிய மக்களை காக்க திட்டம் போட தெரியாத அரசு, டாஸ்மாக்கை மட்டும் மழை வெள்ளத்திலும் திறந்து வைத்துள்ளது. டாஸ்மாக் மூலம் வருமானம் வர வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். இந்த வருமானத்தை வைத்து மக்களை காக்கும் அக்கறை இந்த அரசுக்கு துளியும் இல்லை. மத்திய அரசும் நமக்கு ஏதும் செய்வதில்லை. இனியாவது இந்த அரசு மக்களை ஏமாற்றாமல் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சண்முகம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை