பழசுக்கு எப்பவுமே மவுசுதான்
நம் முன்னோர்கள் காலத்து பழங்காலப் பொருட்கள், வீட்டில் நீண்டகாலமாக பயன்படுத்தி தற்போது பயன்பாடு இல்லாமல் மரம், இரும்பு சாமான்களை காலி இடத்திலும், ஸ்டோர் ரூம்களிலும் குப்பையாக குவித்து வைத்து விடுகிறோம்.பயன்படுத்தாமல் ஒதுக்கப்படும் அந்த மாதிரியான பொருட்களை வாங்கிக்கொண்டு அதற்குரிய விலையும் தருகின்றனர் கோட்டக்குப்பம் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள்.கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் எம்.ஜி.ரோடு, கிழக்கு கடற்கரை சாலையில் 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள சில கடைகளில், ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட சேர், அடுப்பு, தோசைக்கல் முதல் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து விதமான பழைய பொருட்களும் வாங்கி விற்கப்படுகிறது.இந்த பொருட்கள் பாதி விலைக்கு கிடைக்கும் என்பதால், ஏராமானோர் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக பழைய மர ஜன்னல்கள், கதவுகள், திராதிகள் விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளன. இவர்கள் பழங்கால கட்டடங்களை இடித்து, அதில் கிடைக்கும் கதவு, ஜன்னல் மற்றும் இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய மர பொருட்களை வாங்கியும், அதனை புதுப்பித்தும் விற்பனை செய்கிறோம். மேலும் பழைய கட்டடங்களை சிறந்த முறையில் உடைத்தும் தருகிறோம்.இதுபோக மிகவும் பழமையான பொருட்கள் இருந்தால், அதற்கு நல்ல விலை கொடுத்து எடுக்கிறோம். நாங்கள் வாங்கி விற்கும் பழைய மரங்களுக்கு அதிக மவுசு உள்ளது.பழைய வீடுகளை இருப்பதை போன்று புதுப்பிக்க நினைப்பவர்களும், பழைய காலத்து வீடுகள் போன்று கட்ட நினைப்பவர்களும், எங்களிடம் தேடி வந்து, மரங்களை வாங்கிச் செல்கின்றனர்.குறிப்பாக எங்களிடம் தேக்கு, கலி மருது போன்ற மரங்கள் விற்பனை செய்கிறோம். தேக்கு மரம் கிலோ 250 முதல் 350 ரூபாய் வரையும், கலிமருது மரங்கள் 50 முதல் 80 ரூபாய் வரையும், அதற்கு மேல் மரத்திற்கு தகுந்தாற் போன்று விலை மாறும்.மேலும், பயன்பாடு இல்லாமல் உள்ள பழங்கால கலைப்பொருட்கள் வீட்டில் இருந்தால், அதனை மெருகூட்டி வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறோம். எங்களிடம் ஆரோவில் மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து கார்பென்டர்கள், வீட்டின் உரிமையாளர்கள் வாங்கி செல்கின்றனர்' என்றனர்.