உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெற்றோரின் கனவை நிறைவேற்றுங்கள்: மாணவர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி., அட்வைஸ்

பெற்றோரின் கனவை நிறைவேற்றுங்கள்: மாணவர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி., அட்வைஸ்

செஞ்சி: 'பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற மாணவர்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது' என முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசினார். செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் தமிழக அரசு சார்பில் நடந்த தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உங்களை மகிழ்விக்க உங்கள் பெற்றோர் நிறைய செய்து விட்டார்கள். பெற்றோரை மகிழ்விக்க நீங்கள் இதுவரை எதேனும் ஒன்றை செய்திருக்கின்றீர்களா. கல்லுாரியில் படிக்கும் நீங்கள் வேலைக்கு சேர்ந்தால் குடும்ப கஷ்டமெல்லாம் போய்விடும் என பெற்றோர் நினைக்கின்றனர். கனவுடன் இருக்கும் பொற்றோரின் கனவை நிறைவேற்றாத வகையில் வெட்டி பேச்சை பேசிவிட்டு, சினிமாக்களை பார்த்து விட்டு, சினிமா பாடல்களை பாடிக்கொண்டு, அதைபற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தால் எப்படி திறமையை வளர்த்து கொள்ள முடியும். அதற்கான நேரம் எங்கே இருக்கும். நேரத்தை வீணடித்தால் கனவுகளை எப்படி நிறைவேற்ற முடியும். பெரும் சாதனையை எப்படி நிகழ்த்த முடியும். வாழ்க்கை வேடிக்கை இல்லை. உடலை உறுதியாக வைத்திருக்க வேண்டும், அறிவை கூர்மையாக்க வேண்டும், ஒரு வேலையை செய்யும் தகுதி உள்ளவராக மாற வேண்டும். நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் அது உன்னால் மட்டும் தான் முடியும். உனக்கு உலகத்தில் யாரும் இலவசமாக சோறு போட மாட்டார்கள். உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள்தான் வாழ வேண்டும், கல்லுாரி காலத்தில் நீங்கள் நல்ல பண்புகளை வளர்த்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கல்லுாரி சிந்திக்கும் இடம். நமக்குள் என்ன திறமை இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். எதையாவது தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். வாழக்கையில் திட்டமிடல் அவசியம். இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !