உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலீசாருக்கு அரசு பஸ் பாஸ்... விநியோகம்; மாவட்டத்திற்குள் பயணிக்கலாம்

போலீசாருக்கு அரசு பஸ் பாஸ்... விநியோகம்; மாவட்டத்திற்குள் பயணிக்கலாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் துறையினருக்கு, அரசு பஸ்சில் கட்டணமின்றி பயணிப்பதற்காக முதன் முறையாக பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், பஸ்களில் பயணிக்கும்போது, இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலம் இருந்து வந்தது. கைதிகளை அழைத்துச் செல்லும்போதும், வாரண்டை காண்பித்தும் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.நேரம், காலமின்றி பணியாற்றும் போலீசார், தங்கள் பணி நிமித்தமாகவும், வெளியூர்களுக்கு செல்லும்போதும், அடையாள அட்டையை காண்பித்து, சிலர் இலவசமாக பயணித்து வந்தனர். அதனை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனுமதிக்காததால், அடிக்கடி பிரச்னையும் ஏற்பட்டது.கடந்தாண்டு இதேபோல் அரசு பஸ்சில் சென்ற போலீஸ்காரருக்கும், கண்டக்டருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. தமிழகம் முழுதும் போக்குவரத்து துறையினர் போராட்டங்களிலும் ஈடுபட்டதால், பெரிய சர்ச்சை எழுந்தது.இந்நிலையில், இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் விதத்தில், போலீசார் அரசு பஸ்களில் பயணிக்க, பஸ் பாஸ் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.தமிழக அரசு அறிவிப்பின்படி தற்போது, காவல் துறையினருக்கு பஸ் பாஸ் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், மாவட்ட போலீசாருக்கான அரசு பஸ் பயண அட்டையை, எஸ்.பி., சரவணனிடம், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் சிவக்குமார் வழங்கினார். இதனையடுத்து, போலீசாருக்கு பஸ் பாஸ் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'அரசின் உத்தரவின்படி, காவல்துறையில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு, அரசு போக்குவரத்துக் கழகத்தால், அரசு பஸ் பயண அட்டை வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,700 பேருக்கு இந்த பயண அட்டை வழங்கப்படுகிறது.இந்த பஸ் பாஸ்க்கான கட்டணத்தை, போக்குவரத்துக் கழகத்திற்கு அரசு செலுத்திவிடும். கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை ஓராண்டுக்கு இந்த பாஸ் செல்லுபடியாகும். ஆண்டு தோறும் புதுப்பித்து வழங்கப்படும். மாவட்டத்திற்குள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.டவுன் பஸ்கள், புறநகர் பஸ்களில் பயன்படுத்தலாம், 'ஏசி', அரசு விரைவு பஸ்களில் பயன்படுத்த முடியாது. பஸ் பாசை கண்டக்டர், பரிசோதகர் கேட்கும்போது காண்பிக்க வேண்டும்.பஸ் பாஸ் தொலைந்தால் மாற்று அட்டை கண்டிப்பாக வழங்கப்படாது. பஸ் பாஸ் பயன்படும் காலத்திற்கு பிறகு, அலுவலகத்தில் ஒப்படைத்து விட வேண்டும். வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றால், பாஸ்சை ஒப்படை த்துவிட்டு, அந்த மாவட்டத்தில் வேறு பாஸ் பெற வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kanns
மார் 08, 2025 10:15

ABOLISH All Freebies/Concessions etc to All OverFattened PeopleReps, GovtOfficials& UnDue-UnAuthorised Groups Media, Women etc etc. REDUCE All Govt Posts& Pays to ONLY Appropriate Minm Wages 07-UnSkilled Lessskilled Semiskilled Skilled Hiskilled VHiskilled Superskilled to All from President to Labourer ONLY for Worked Hours Except Paid 52WeeklyOffs Cum CasualLeave


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை