கணவர் அடித்து துன்புறுத்துவதாக அரசு பள்ளி ஆசிரியை புகார்
விழுப்புரம்: கணவன் அடித்து துன்புறுத்துவதாக, எஸ்.பி., அலுவலகத்தில் அரசு பள்ளி ஆசிரியை, தனது குழந்தைகளுடன் மனு கொடுத்தார்.விழுப்புரம் அடுத்த சின்னபாபுசமுத்திரத்தை சேர்ந்தவர் குமரன் மனைவி அருள்மொழி, 35; என்பவர், எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில்;சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். கடந்த 2011ம் ஆண்டு திருமணமாகி 13 வயது மகன், 11 வயது மகள் உள்ளனர். விவசாய வேலை செய்யும் கணவர் அவரது தாய் துாண்டுதலால் அடிக்கடி அடித்து கொடுமை செய்தார்.கடந்த மாதம் அடித்து துன்புறுத்தி, தாலியை கழற்றி கொண்டு வீட்டை விட்டு குழந்தைகளுடன் துரத்தினார். கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்தனார். ஆனால் கைது செய்யவில்லை. முட்ராம்பட்டில் தனியாக வசித்து வருகிறேன். கணவர் வீட்டில் இருந்த துணிகளை எடுக்க சென்றபோது, தடியால் அடித்து துரத்தினார். விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அருள்மொழியை கணவர் குமரன் தடியால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.