உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் முன்னேற்றம் : 28ல் இருந்த 11வது இடத்திற்கு முன்னேற்றம்

பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் முன்னேற்றம் : 28ல் இருந்த 11வது இடத்திற்கு முன்னேற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் 28வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், பல ஆண்டுகளாக கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. இம்மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக பல அரசு கல்லுாரிகள் துவங்கப்பட்டும், அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும் வருகிறது. ஆனாலும், அரசு பொதுத்தேர்வு முடிவுகளில் விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து பின் தங்கியே இருந்தது.சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், இம்மாவட்டம் முன்னேறி வருகிறது. இந்நிலையில், 2024-25ம் கல்வி ஆண்டில் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 192 பள்ளிகளைச் சேர்ந்த 21,581 மாணவர்களில், 20,528 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால், 95.11 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 18வது இடத்தை பிடித்தது.இதில், மாவட்டத்தில் உள்ள 121 அரசு பள்ளிகளை சேர்ந்த 6,780 மாணவர்கள், 7,972 மாணவிகள் என மொத்தம் 14,752 பேர் தேர்வு எழுதினர். இதில், 6,192 மாணவர்கள், 7,632 மாணவிகள் என மொத்தம் 13,824 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால், அரசு பள்ளிகள் தேர்ச்சியில், இம்மாவட்டம் 93.71 சதவீதம் பெற்று தமிழகத்தில் 11வது இடத்தை பிடித்தது. மேலும், மாவட்டத்தில் 35 அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.அரசு பள்ளிகள் அளவில் கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 89.76 சதவீதம் தேர்ச்சி பெற்று 28வது இடத்திலும், கடந்த 2023-24ம் கல்வி ஆண்டில் 91.3 சதவீதம் தேர்ச்சி பெற்று 20வது இடத்திலும் இம்மாவட்டம் இருந்தது. தற்போது 2024-25ம் கல்வி ஆண்டில் 93.71 சதவீதம் தேர்ச்சி பெற்று 11 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு பொதுத்தேர்வுகளில் மாவட்டத்தை முதன்மை நிலைக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 8 முறை குறுந்தேர்வு, 4 திருப்புதல் தேர்வு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டது. இதை தவிர்த்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக ஆசிரியர்களிடம் மீளாய்வு செய்து அறிவுரை வழங்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக கவனம் செலுத்தி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை