5 ஆண்டுகளாக பயிற்சியாளர் இல்லாத அரசு நீச்சல் குளம்; துணை முதல்வர் ஆய்வு செய்தும் அதே நிலை
விழுப்புரம் அரசு நீச்சல் குளத்திற்கு, பயிற்சியாளர் பணியிடம், கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது. துணை முதல்வர் நேரில் ஆய்வு செய்த பின்னரும், பிரச்னை தீர்க்கப்படவில்லை என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.விழுப்புரத்தில், கடந்த 6ம் தேதி, துணை முதல்வர் உதயநிதி தலைமையில், வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும், விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.அப்போது, உடனிருந்த சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு செயலர் தாரேஷ் அகமது, நீச்சல் குளத்தின் நீரில் போதிய அளவு குளோரின் சேர்க்கப்படவில்லை என்றார். இதையடுத்து, நீச்சல் குளத்தின் நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், நீச்சல் குளத்தை முறையாகப் பராமரிக்குமாறு அரசு அலுவலர்களிடம், துணை முதல்வர் அறிவுறுத்தினார்.இந்நிலையில், இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அலுவலர் ஜெயகுமாரி, திருப்பத்துார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக உயிர் காப்பாளர்களாக (லைப் கார்டு) இருந்த வசந்த், வெற்றிவேலன் ஆகியோர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்காலிக பணியிலிருந்த தங்கள் மீதான நடவடிக்கைக்கான காரணம் தெரியாமல் இருவரும் பரிதவிக்கின்றனர்.ஆனால், விழுப்புரம் மாவட்ட நீச்சல் குளத்திற்கு பயிற்சியாளர் பணி, 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது. துணை முதல்வர் நேரில் ஆய்வு நடத்திய பின்னரும், நீச்சல் பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை.இதனைப் பற்றி அரசு உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதே, நீச்சல் பயிற்சி பெறும் குழந்தைகளின் பெற்றோர்களின் ஆதங்கமாக உள்ளது.