தோட்டக்கலை அதிகாரிகள் காட்டில் அடை மழை: வானுாரில் விவசாயிகள் கண்ணீருடன் புகார்
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்தாண்டு இறுதியில் பெய்த பெஞ்சல் புயல் கனமழை பெய்து, 3 லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. வெள்ளம் காரணமாக 16 பேர் இறந்தனர். ஆடு, மாடு, கன்றுகள் இறந்ததோடு, வீடுகளும் சேதடைமந்தன. இதேபோல் வெள்ள நீரில் மூழ்கி, 2 லட்சத்து ஆயிரத்து 400 ஏக்கர் விளைநிலங்கள் முழுமையாகவும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 715 ஏக்கர் விளைநிலங்கள் 33 சதவீதத்திற்கு மேலாக சேதமடைந்தன. ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 486 விவசாயிகள் பாதிப்படைந்தனர்.இதில் வானூர் வட்டார விவசாய நிலங்களும் அடங்கும். தற்போது, வெள்ளத்தில் பயிர்கள் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வானுார் தாலுகாவில் 7 ஆயிரத்து 74 பேருக்கு ரூ.6.91 கோடி வழங்கும் பணி நடந்து வருகிறது.இதில் வேளாண்துறை அதிகாரிகள் சரியான கணக்கெடுப்பு நடத்தாமல், தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், பயிர் செய்யாத விவசாய நிலங்களையும் லிஸ்ட்டில் சேர்த்து, புயல் நிவாரணம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.புயல் நிவாரணம் கிடைக்காத விவசாயிகள், நிவாரணத்தொகை வழங்கும் நாள் முதல் இன்று வரை திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. புயல் நிவாரணம் வழங்கும் விஷயத்தில் பாரபட்சத்துடன் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் கண்ணீருடன் புலம்பி வருகின்றனர்.இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு நடத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உண்மையான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. -நமது நிருபர்-