உழவர் நலச்சேவை மையம் துவங்க தோட்டக்கலைத் துறை அழைப்பு
கண்டாச்சிபுரம்: முகையூர் ஒன்றியத்தில் உழவர் நலச் சேவை மையங்கள் தொடங்க தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது. முகையூர் வட்டார தோட்டக்கலை துறை துணை இயக்குநர் பிரியதர்ஷினி செய்திக்குறிப்பு: முகையூர் ஒன்றியத்தில் வேளாண்துறை சார்ந்த டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு உழவர் நலச் சேவை மையங்கள் அமைக்க 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை, 30 சதவீத மானியத்துடன் தமிழக அரசு நிதியுதவி செய்கிறது. இம்மையங்களில் உழவர்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யவும், வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விளை நிலத்தில் நோய் தாக்கங்கள் குறித்து ஆலோசனையும் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகளுக்கு 15 நாட்கள் வரை வேளாண்மை அறிவியல் மையத்தில் பயிற்சி அளிக்கப்படும். இதனை முகையூர் ஒன்றிய அளவிலான தகுதியுள்ள பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.