ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப பெருவிழா
விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் 101ம் ஆண்டு லட்ச தீப விழாயொட்டி ஏராளமான பக்தர்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்சத்தீப பெருவிழா கடந்த 10ம் தேதி காலை 7.00 மணிக்கு மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, தினசரி உற்சவம் நடந்து வந்தது. முக்கிய விழாவான விசுவாவசு தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி, லட்ச தீப பெருவிழா நேற்று நடந்தது. காலை 5.00 மணிக்கு மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபாடு தொடங்கியது. குளக்கரையோரம் பக்தர்கள் அகல் விளக்கேற்றினர். காலை 11.00 மணி வரை திரளான பக்தர்கள் திரண்டு வந்து லட்ச தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். மூலவர் ஆஞ்சநேயர் தங்க காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 10.00 மணிக்கு குருஜி தொல்காப்பியரங்கதாஸ் தலைமையில் ஹரிபஜனை நடந்தது. லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5.00 மணிக்கு அனுமனின் பெருமை என்ற தலைப்பில் காங்கேயன் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இரவு 7.00 மணிக்கு இசை பயிலக மாணவர்களின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். இரவு 8.00 மணிக்கு ராமர், வரதராஜர் அவதாரத்தில் ஆஞ்சநேயர் சுவாமியுடன் கருட சேவையும், ஹயக்ரீவர் வீதியுலா நடந்தது. வரும் 19ம் தேதி இரவு 11.00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது.