நீதிமன்ற பணியாளர்கள் பணிக்கு விழுப்புரத்தில் முதன்மை தேர்வு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நீதிமன்ற பணியாளர் பணிக்கான முதன்மைத் தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், தோட்ட பராமரிப்பாளர், மசால்ஜி (கீழ்மட்ட பணியாளர்கள்) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான, முதன்மைத் தேர்வு நேற்று அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது.விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, அரசு கலை, அறிவியல் கல்லூரி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய 4 தேர்வு மையங்களில் நடைபெற்றது. நேற்று காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற்ற தேர்வில், 3 ஆயிரத்து 780 பேர் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதி பெறுவோருக்கு பணி உத்தரவு வழங்கப்படும்.விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் நடந்த தேர்வை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) இளவரசன் நேரில் பார்வையிட்டார். அப்போது மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, நீதிமன்ற மேலாளர் ஷெரீன்சந்தோஷ் உடனிருந்தனர்.