வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது
வானுார்:விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, ஜவகர் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 48; ஐ.டி.ஐ., படித்த இவர், வெளிநாட்டு வேலைக்காக, புதுச்சேரி அரியாங்குப்பம் கடலுார் ரோட்டை சேர்ந்த செல்வராஜ்,56; என்பவரை அணுகினார். நியூசிலாந்து நாட்டில் வேலை இருக்கிறது, அதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றும் செல்வராஜ் கூறியதன்பேரில் சண்முகசுந்தரம் கூகுள் பே மூலம் ரூ.3 லட்சத்தை அனுப்பி, பல நாட்கள் கடந்தும் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பவில்லை. பல முறை பணத்தை திரும்பிக்கேட்டும் சரியான பதில் சொல்லாமல் காலம் கடத்திவந்தார். இந்நிலையில் சண்முகசுந்தரம், வேறொரு ஏஜென்சி மூலம், துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில், தனது கணவரை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சண்முகசுந்தரம் மனைவி ஆறுமுகசெல்வி, 41; ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.