மேலும் செய்திகள்
காங்கேயம் இன மாடுகள் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை
15-Dec-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாரி கவிழ்ந்து 20 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதமடைந்தது. நாமக்கல் பகுதியிலிருந்து, விழுப்புரத்திற்கு முட்டை ஏற்றி வந்த மினி லாரி, நேற்று காலை விழுப்புரத்திற்கு வந்தது. அங்கிருந்து காலை 8:30 மணிக்கு புறப்பட்டு, சென்னை நெடுஞ்சாலை வழியாக செஞ்சி நோக்கி புறப்பட்டுச் சென்றது. விழுப்புரம் அடுத்த கெடாரைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ், 35; குணசேகரன், 40; ஆகியோர், இந்த மினி லாரியில் சென்றனர். விழுப்புரம்-சென்னை நான்கு வழிச்சாலையில், விழுப்புரம் அடுத்த அயனம்பாளையம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, முன்னாள் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது, இந்த முட்டை ஏற்றிய மினி லாரி திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், மினி லாரியிலிருந்த முட்டைகள் உடைந்து சாலையில் வழிந்து சென்றது. தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சென்று, வாகனத்தை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து, மாற்று மினி லாரி கொண்டு வந்து, எஞ்சிய முட்டைகளை அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் டிரைவர் ரமேஷ் உள்ளிட்ட இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். லாரியில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதமடைந்தது. விபத்து குறித்து, தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.
15-Dec-2025