திறமை மிகு தமிழக மாணவர்கள் அமைச்சர் பெருமிதம்
விழுப்புரம்: தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மயிலம் பொறியியல் கல்லுாரி கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினர். இதில் விக்கிரவாண்டி, முகையூர், திருவெண்ணெய்நல்லுார் ஆகிய வட்டாரங்களில், 265 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் 38 அரசு நிதி உதவிபெறும் துவக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இதில், அமைச்சர் மகேஷ் பேசியதாவது: மாணவர்களின் கற்றல் அடைவுத்திறனை அதிகரிப்பதுடன், அடைவுத் தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்வதும் முக்கியம். தமிழக மாணவர்கள் திறமை மிக்கவர்களாக உள்ளனர். இதற்கு துவக்கக் கல்வி பெரும் காரணமாக உள்ளது. விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறையில் கடந்த 3 ஆண்டுகளில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரித் துள்ளது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், திறனாய்வு தேர்வில் மாநில அளவில் முதலிடம் மற்றும் 7.5 சதவீத இட ஒதுக் கீட்டில் சேர்க்கை பெற்ற முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மாணவி பூமிகாவிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், அரசு பள்ளியில் அதிக மாணவிகளை சேர்த்துள்ள தலைமையாசியர், அரசு பள்ளியில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு மேல் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய தலைமையாசியர், அதிக பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மாநில தொடக்கக்கல்வி இயக்கக இயக்குநர் நரேஷ், சி.இ.ஓ., அறிவழகன், டி.இ.ஓ., (இடைநிலை) சிவசுப்பரமணியன், மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம், மயிலம் பொறியியல் கல்லுாரி இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.