உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தை பேறுக்கு பரிகார பூஜை செய்வதாக 5 சவரன் நகை பறித்த தாய், மகன் கைது

குழந்தை பேறுக்கு பரிகார பூஜை செய்வதாக 5 சவரன் நகை பறித்த தாய், மகன் கைது

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே குழந்தை பேறுக்கு பரிகார பூஜை செய்வதாக கூறி 5 சவரன் நகையுடன் மாயமான தாய், மகனை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் ஜெகதீசன் மனைவி புவனேஸ்வரி, 21: இவருக்கு திருமணமாகி, குழந்தை இல்லை என வருத்தத்தில் இருந்தார். கடந்த 21ம் தேதி, தெருவில் தேன் விற்க வந்த பெண் புவனேஸ்வரியிடம் பேசினார். அப்போது, பரிகார பூஜை செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என கூறினார். அதை நம்பிய புவனேஸ்வரி, பரிகார பூஜை செய்ய கடந்த 22ம் தேதி அப்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்தார். அப்பெண்ணுடன் ஒரு வாலிரும் வந்து பரிகார பூஜை செய்தார். பூஜையில் புவனேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தார் கலந்து கொண்டனர். பரிகார பூஜை செய்யும்போது, 'உன் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது, உன் கழுத்தில் அணிந்திருக்கும் 5 சவரன் தாலி செயினை கழற்றிக் கொடு என அப்பெண் கூறினார். புவனேஸ்வரியும் தாலி செயினை கழற்றி கொடுத்தார். நகையை வாங்கிய சில நிமிடத்தில், தாலி செயினை தாமரை பூவில் வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி, பெண்ணும், உடன் வந்த நபரும் அங்கிருந்து அவசரமாக புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.புவனேஸ்வரி கஞ்சனுார் போலீசில் புகார் அளித்தார். மாவட்ட எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், புவனேஸ்வரியிடம் பரிகாரம் செய்வதுபோல் நகையை பறித்து சென்றது, வேலுார் மாவட்டம் காட்பாடி, திருவளம் கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி வள்ளியம்மாள், 44; அவரது மகன் வல்லரசு,22; என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, 5 சவரன் தாலி செயின் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை