கோட்டக்கரை சாலையில் சிறிய பாலம் பழுது வாகன ஓட்டிகள் திக்...திக்...
வானுார்: இரும்பையில் இருந்து ஆலங்குப்பம் செல்லும் சாலையில் கோட்டக்கரை சந்திப்பு அருகில் உள்ள சிறிய பாலம் கனமழையால் சேதமடைந்து விட்ட தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில் இருந்து இரும்பை வழியாக ஆலங்குப்பம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக 10க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் கடந்து செல்கின்றனர். குறிப்பாக சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு, சென்னை, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளும் இந்த சாலை வழியாக தான் செல்கின்றனர்.மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், கோட்டக்கரை சந்திப்பு அருகில், வளைவு பகுதியில் சிறிய பாலம் உள்ளது. அப்பகுதியில் ஓடையில் இருந்து பாலம் வழியாக மழைநீர் செல்கிறது. கடந்த மாதம் பெய்த கன மழையில், பாலத்தின் பக்க வாட்டில் சேதமடைந்து விட்டது. பெரிய அளவில் சேதமடைந்து விட்டதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எப்போது வேண்டுமானாலும், வாகன ஓட்டிகள், சாலையோரம் விழுந்து விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பழுதடைந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.