சர்வீஸ் சாலை கந்தல் வாகன ஓட்டிகள் அவதி
திண்டிவனம்: திண்டிவனம் கோர்ட் எதிரில் சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை பகுதியில் கோர்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டுக்கு வாகனங்கள் சென்று, வரும் வகையில் தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, அப்பகுதியில் தற்காலிக சர்வீஸ் சாலை அமைத்து வாகனங்கள் சென்னை மற்றும் திருச்சி மார்க்கங்களுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சர்வீஸ் சாலை கடந்த சில தினங்களுக்கு முன் சேதமடைந்தது. இதனை பேட்ஜ் ஒர்க் செய்து சீரமைத்தனர். தற்போது திண்டிவனம் பகுதியில் பெய்துவரும் மழையால், பேட்ஜ் ஒர்க் செய்த இடங்களில் மீண்டும், மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தும், அச்சத்தோடும் பயணித்து வருகின்றனர்.