| ADDED : நவ 21, 2024 12:40 AM
விழுப்புரம்,: விழுப்புரத்தில் கடைகளில் அரசால் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க, நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் வந்தது. கலெக்டர் பழனி அறிவுறுத்தலின் பேரிலும், விழுப்புரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் உத்தரவின் பேரிலும், நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் ராமச்சந்திரன், பரப்புரையாளர்கள் கோதை, சுதா, கஸ்துாரி ஆகியோர் கொண்ட குழுவினர், எம்.ஜி., ரோட்டில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.அதே போல், நகராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் மதன்குமார் அடங்கிய குழுவினர், பாகர்ஷா வீதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இங்குள்ள, மொத்த விற்பனை கடைகள், சில்லரை விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், மொத்த விற்பனை கடைகளில் அரசால் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். மொத்தம் மூன்று கடைகளில் 85 கிலோ பிளாஸ்டிக் கப்புகள், கவர்கள், உணவு பார்சல் கட்டும் பிளாஸ்டிக் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. 45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.