உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

கோட்டக்குப்பம்: ஐகோர்ட் உத்தரவின் படி ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி, பெரிய கோட்டக்குப்பம் பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரியக்கோட்டகுப்பம் ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு நடுக்குப்பம் மீனவ கிராமம் அருகே உள்ளது. அந்த இடத்தில் அப்பகுதி மக்கள் சடலங்களை அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில் கடல் அரிப்பின் காரணமாக கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள், அந்த சுடுகாட்டில் நிறுத்தி வைத்தனர். நாளடைவில் மீனவ பகுதியில் நிலப்பரப்பு சுருங்கியதால் படகுகளை சுடுகாட்டில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஆதி திராவிட மக்கள் பிணங்களை புதைக்க செல்லும் போது மீனவர்கள் படகை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் மீனவர்கள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் இருதரப்பினரையும் அழைத்து பேசியும் வருவாய்த்துறை மற்றும் போலீசாரால் தீர்வு காண முடிய வில்லை. இந்நிலையில் சுடுகாட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பெரியக்கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆக.,12ம் தேதி சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், ஆதி திராவிட மக்களின் சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தரும் படி நகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. அந்தத் தீர்ப்பில் 8 வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக நேற்று நடுக்குப்பம் மீனவ பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே ஐகோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி நேற்று கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை, பெரியக் கோட்டக்குப்பம் ஆதிதிராவிட மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது கோட்டக்குப்பம் பகுதியில் ஆய்வு பணியை மேற்கொண்டு விட்டு நகராட்சி அலுவலகம் வந்த ஆணையர் புகேந்திரியிடம் ஆதிதிராவிடர மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்து விட்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ