முத்தாம்பாளையம் ஏரி புனரமைப்பு பணி துவக்கம்
விழுப்புரம் : முத்தாம்பாளையம் ஏரி, தன்னார்வலர்களுடன் இணைந்து புனரமைக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்து கூறியதாவது;விழுப்புரம் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் சீமை கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் அதிகனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் நீர்நிலைகள் புனரமைக்கும் பணிகள் நீர்வளத்துறை, ஊரக வளாச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், முத்தாம்பாளையம் ஏரி ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் தன்னார்வலர்களுடன், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து புனரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. 127.26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முத்தாம்பாளையம் ஏரியினை துார்வாரி 1.5 கி.மீ., நீளத்திற்கு கரைகளை பலப்படுத்தி, கரைகளை சுற்றி மரக்கன்று நட்டு பராமரிக்கப்பட உள்ளது என்றார்.அப்போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் அசோக்குமார், நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்தி, தாசில்தார் செல்வமூர்த்தி, பி.டி.ஓ., கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.