விழுப்புரம் அரசு கல்லுாரியில் தேசிய இளைஞர் திருவிழா
விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் மாவட்ட அளவில் தேசிய இளைஞர் திருவிழா நடந்தது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாபு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் அற்புதவேல் ராஜா தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். இயற்பியல் துறை தலைவர் கனகசபாபதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சத்யா, சுசான்மரி நெப்போலியன், ரமேஷ், சிவசக்திவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து, தேசிய இளைஞர் விழா பண்பாட்டு போட்டிகள் நடந்தது. நாட்டுப்புறக்குழு நடனம், பாடல், கதை எழுதுவது, பேச்சு, ஓவியம், கவிதை என பல்வேறு போட்டிகள் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லுாரிகள், பள்ளிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், வெற்றி பெற் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறுவார்கள். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் குணசேகர் நன்றி கூறினார்.