அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட்தேர்வு பயிற்சி துவக்கம்
விழுப்புரம் : விழுப்புரம், பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்பு துவங்கியது. பயிற்சி வகுப்பை கலெக்டர் பழனி துவக்கி வைத்து கூறியதாவது:அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்விற்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம், பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் முருங்கம்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், 113 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 780 மாணவ, மாணவிகள், 5 ஆதிதிராவிடர் நல பள்ளிகளைச் சேர்ந்த 43 மாணவ, மாணவிகள், 3 நகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 11 மாணவ, மாணவிகள், 16 நிதியுதவி பள்ளிகளைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் உட்பட 874 மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.சி.இ.ஓ., அறிவழகன், அவரது நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், பள்ளி துணை ஆய்வாளர் வீரமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.