புதிய ரேஷன் கடை திறப்பு
மரக்காணம்: வடநெற்குணம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது. மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடநெற்குணத்தில் புதிய ரேஷன் கடை கேட்டு அப்பகுதி மக்கள் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன் எம்.எல்.ஏ., நிதியில் இருந்து ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலகிருஷ்ணன், சிவக்குமார், கிளை செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.