மேலும் செய்திகள்
வளர்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்
15-Sep-2025
விழுப்புரம்: மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள அனைத்து பகுதிகளுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில் அவர் கூறியதாவது: நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்தால், மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க, பேரிடர் பாதுகாப்பு மையம் தயார் நிலையம் வைத்திருக்க வேண்டும். முகாம்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன. இங்கு மக்களுக்கு தேவையான உணவு, சுகாதார குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் செய்து தர வேண்டும். கனமழை அதிகமிருந்தால் உடனே கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மழையை எதிர்கொள்ளும் வகையில், காவல் துறை, தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்பு படை, பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருக்க வேண்டும். கடலோர பகுதிகளான மரக்காணம், வானுார், கோட்டக்குப்பத்தில் மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க வேண்டும். படகுகள், மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர்வளத்துறை சார்பில், அணைகள், ஏரிகள் நீர் இருப்பு குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். நீர் வெளியேற்றும் பட்சத்தில் உடனே மக்களுக்கு உரிய தகவலை வழங்கி, மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க வேண்டும். பேரிடர் காலங்களில், பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகாரை தெரிவிக்க, கட்டணமில்லா அழைப்பு எண் 1077, தொலைபேசி எண் 04146 223265 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இதில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், சப் கலெக்டர் ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
15-Sep-2025