உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரவுடிசம், கஞ்சா கடத்துவோர் மீது குண்டாஸ்; போலீசாருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி., உத்தரவு

ரவுடிசம், கஞ்சா கடத்துவோர் மீது குண்டாஸ்; போலீசாருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி., உத்தரவு

விழுப்புரம்; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களின் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ராகார்க் தலைமை தாங்கினார். சரக டி.ஐ.ஜி., திஷா மித்தல், எஸ்.பி.,க்கள் சரவணன் (விழுப்புரம்), ஜெயக்குமார் (கடலுார்), ரஜத்சதுர்வேதி (கள்ளக்குறிச்சி) மற்றும் மூன்று மாவட்ட ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், போலீசார் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.ஜி., அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, ஐ.ஜி., அஸ்ராகார்க் கூறியதாவது;மூன்று மாவட்டங்களிலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அங்குள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். இங்குள்ள பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்டறிந்து, ஈடுபட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும்.திருட்டு, வழிப்பறி ஆகிய குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மண் வளங்களை கொள்ளையடிப்போரை கண்டறிந்து கைது செய்வதோடு, தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டங்களில் கைது செய்ய வேண்டும்.சாலை விபத்துகளை தடுக்க அதிகமாக விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து தடுப்பு கம்பிகள் அமைப்பதோடு, அங்கு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்கிறதா என்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்கள், சாராயம் கடத்துவதை தடுக்க அனைத்து செக்போஸ்ட்களிலும் 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீசார் தீவிர வாகன சோதனை செய்திட வேண்டும்.மதுபானம் கடத்தல், சாரயம் விற்பனை செய்வோரை கண்டறிந்து அவர்களை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ரவுடிசத்தில் ஈடுபடுவோரையும், கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்துவோரை கண்டறிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இந்த மூன்று மாவட்டங்களிலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் விழிப்போடு இருந்து தீவிர பணியாற்ற வேண்டும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை