உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே கேட்களில் அதிகாரிகள் ஆய்வு! தவறுகள் கண்டறிந்தால் உடனடி நடவடிக்கை

ரயில்வே கேட்களில் அதிகாரிகள் ஆய்வு! தவறுகள் கண்டறிந்தால் உடனடி நடவடிக்கை

விழுப்புரம்: கடலுார் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தின் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் ரயில்வே 'கேட்'களை விரைவில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதில் தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநில மக்களும் தரைவழியில் சொகுசு பயணமாக செல்வதற்கு பெரும்பாலும் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். இதனால், ரயில் போக்குவரத்தில் எந்த நேரமும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம்.இதில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள, தெற்கு ரயில்வே துறையில் ஊழியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் என பலரும் பணிபுரிகின்றனர். முக்கியமாக ரயில் சிக்னலை இயக்கும் தொழில்நுட்ப பிரிவு ரயில்கள் வந்து செல்லும் போது, கேட்களை மூடும் கேட்கீப்பர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தெற்கு ரயில்வே துறையின் கீழ் விழுப்புரம் - புதுச்சேரி ரயில்வழி மார்க்கத்தில் 24 ரயில்வே 'கேட்'களும், விழுப்புரம் - விருத்தாசலம் மார்க்கத்தில் 28 ரயில்வே 'கேட்'களும், விழுப்புரம் - காட்பாடி மார்க்கத்தில் 56 ரயில்வே 'கேட்'களும், விழுப்புரம் - புதுச்சேரி மார்க்கத்தில் 49 ரயில்வே 'கேட்'களும், விழுப்புரம் - திண்டிவனம் மார்க்கத்தில் 40 ரயில்வே 'கேட்'களும் உள்ளன.கடந்த சில தினங்களுக்கு முன், கடலுார் மாவட்டம், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதற்கு காரணம், 'கேட்'களை மூடாமல் ரயில்வே கேட் கீப்பர் துாங்கியது தான், என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் விழுப்புரம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில்வே 'கேட்'களின் தற்போதைய பராமரிப்பு நிலை மற்றும் 'கேட்' கீப்பரின் பணிகளை கண்டறிவதற்கு, தெற்கு ரயில்வே வாரிய உயர் அதிகாரிகள், அலுவலர்களை வாரத்தில் இருமுறை கண்காணித்து, தகவல்களை தெரிவிக்க வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.இதையொட்டி, விழுப்புரம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள ரயில்வே கேட்களில், 'கேட்'கள் சரியாக இயங்குகிறதா என்பது குறித்தும், கேட்டிற்கு அருகே உள்ள சிக்னல்கள், மின்சார நிலை மற்றும் கேட்கீப்பர்கள் ஒழுங்காக ரயில்கள் வந்து செல்லும் நேரத்தை பதிவேட்டில் எழுதுகின்றனரா என்பன உள்ளிட்டவை குறித்தும்அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உயர் அதிகாரிகளிடம் கூறி சரிசெய்வதோடு, கேட் கீப்பர்களிடம் குறைபாடு கண்டறிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் ஆயத்தமாகியுள்ளனர். இதனால், இங்குள்ள ரயில்வே கேட் கீப்பர்கள் அதிகாரிகளின் ஆய்வு பணியை சமாளிக்கும் வகையில், அவர்கள் பணிபுரியும் கேட்களில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்க தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ