மாணவி இறந்த தனியார் பள்ளியை மீண்டும் திறக்க அதிகாரிகள் ஆய்வு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மாணவி இறந்த பள்ளியில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் உள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த எல்.கே.ஜி., மாணவி லியாலட்சுமி,4; கடந்த 3ம் தேதி உணவு இடைவேளையில் விளையாடியபோது, கழிவு நீர் தொட்டியில் விழுந்து இறந்தார். அதையடுத்து பள்ளி மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், மெட்ரிக் பள்ளி டி.இ.ஓ., சண்முகவேல் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், சமூக ஆர்வலர் வாசுகி ஆகியோர் கொண்ட குழுவினர், இப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து நேற்று ஆய்வு செய்தனர்.பின், டி.இ.ஓ., சண்முகவேல் கூறுகையில், 'பள்ளியை மீண்டும் திறக்க தேவையான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்கிறோம். அடிப்படை வசதிகள் குறைவாக இருந்தால், பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து சரி செய்த பின் பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.அவரிடம், 'நான்கு மாதங்களுக்கு முன் ஆய்வு செய்தபோது, கழிவு நீர் தொட்டி மூடி குறைபாடு தெரியவில்லையா' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர், 'நான் பொறுப்பேற்று 2 மாதமே ஆகிறது. பள்ளியில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டால், முன்பு ஆய்வு செய்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும்' என்றார். கைதான மூவரும் ஜாமின் கோரி மனு
மாணவி இறந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக்மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேரும், ஜாமின் கேட்டு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்ற மாவட்ட நீதிபதி மணிமொழி, இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (டிச.8) நடைபெறும் என்று உத்தரவிட்டார்.