மாவட்டத்திற்கு ஒரு அமைச்சராகியும் இன்னமும் இரண்டு கோஷ்டிதான்
விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி, மஸ்தான் என இரண்டு அமைச்சர்களை கட்சி தலைமை நியமித்தது. இதனால் மாவட்டத்தில் பொன்முடி, மஸ்தான் என இரண்டு கோஷ்டியானது.கோஷ்டி பிரச்னை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து, கட்சித் தலைமைக்கு தொடர்ந்து அடுக்கடுக்காக புகார்கள் குவிந்தன. இதன் காரணமாக கட்சித் தலைமை மஸ்தானிடமிருந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை பறித்தது. இதற்கடுத்து, சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில், மஸ்தானிடமிருந்த அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி மட்டுமே அமைச்சர் என்ற நிலை ஏற்பட்டது.அதன்பிறகும், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மஸ்தானின் ஆதரவாளர்கள் பலர், பொன்முடியை சந்திக்காமல் ஜகா வாங்கி வந்தனர். இதற்கிடையே கட்சித் தலைமை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டது.இதில் விழுப்புரம் மாவட்டத்திற்கு யாரும் பொறுப்பு அமைச்சராக போடவில்லை. இதனால் பொன்முடிதான் பொறுப்பு அமைச்சர் என உறுதியானது. அப்படி இருந்தும், மஸ்தானின் ஆதரவாளர்கள் பலர் பொன்முடியை சந்திப்பதில் தயக்கம் காட்டி வந்தனர்.இதற்கிடையே திண்டிவனத்தில் தி.மு.க., இளைஞரணி சார்பில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற மண்டல அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது.போட்டியை துவக்கி வைக்க வந்த அமைச்சர் பொன்முடிக்கு தி.மு.க., வினர் 2 கோஷ்டியாக பிரிந்து வரவேற்பு கொடுத்தனர். விழா நடைபெற்ற திருமண மண்டபத்திற்கு வந்திருந்த அவருக்கு பொன்முடி ஆதரவாளர்கள் ஒரு பக்கமும், மஸ்தான் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஒரு பக்கம் என தனித்தனியாக வரவேற்பு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.