மார்க்கெட் கமிட்டிகளில் ஓராண்டு கொள்முதல் ரூ.583 கோடி: மாவட்டத்தில் 2.34 லட்சம் விவசாயிகள் பயன்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மார்க்கெட் கமிட்டிகள் மூலம் கடந்த ஓராண்டில், 17 ஆயிரத்து 898 மெட்ரிக் டன் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக 583 கோடியே 74 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட வேளாண் விளைபொருட்கள் விற்பனை குழுமத்தின் மூலம், விவசாய விளைபொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, அரகண்டநல்லுார், அவலுார்பேட்டை, விக்கிரவாண்டி, மரக்காணம், வளத்தி ஆகிய இடங்களில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், நெல், மணிலா, பருத்தி, எள், உளுந்து, பச்சைப் பயிர், நாட்டு கம்பு மற்றும் பனிப்பயிர் ஆகியவற்றை, விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், கடந்த 2024 ஏப்., முதல் 2025 பிப்., மாதம் வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 881 விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். அதில், விழுப்புரம் கமிட்டியில் 27 ஆயிரத்து 693 விவசாயிகளிடம், ரூ. 50.49 கோடி மதிப்பிலான 1,309 மெட்ரிக் டன், திண்டிவனம் கமிட்டியில் 17 ஆயிரத்து 785 விவசாயிகளிடம், ரூ. 44.69 கோடி மதிப்பிலான 527.63 மெட்ரிக் டன், செஞ்சி கமிட்டியில் 47 ஆயிரத்து 663 விவசாயிகளிடம், ரூ. 155.92 கோடி மதிப்பிலான 6,019 மெட்ரிக் டன், அரகண்டநல்லுார் கமிட்டியில் 70 ஆயிரத்து 561 விவசாயிகளிடம், ரூ. 164.94 கோடி மதிப்பிலான 5,227 மெட்ரிக் டன் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல், அவலுார்பேட்டை கமிட்டியில் 37 ஆயிரத்து 659 விவசாயிகளிடம், ரூ. 86.98 கோடி மதிப்பிலான 3,074 மெட்ரிக் டன், விக்கிரவாண்டி கமிட்டியில் 33 ஆயிரத்து 268 விவசாயிகளிடம், ரூ. 80.32 கோடி மதிப்பிலான ஆயிரத்து 719 மெட்ரிக் டன், மரக்காணம் கமிட்டியில் 45 விவசாயிகளிடம், ரூ.6 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான 2.52 மெட்ரிக் டன், வளத்தி கமிட்டியில் 207 விவசாயிகளிடம், ரூ. 15.78 கோடி மதிப்பிலான 15.78 மெட்ரிக் டன் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், 2 லட்சத்து 34 ஆயிரத்து 881 விவசாயிகளிடம், 17 ஆயிரத்து 898 மெட்ரிக் டன் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் முழுதும் 583 கோடியே 74 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.