உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பானாம்பட்டு நீர் வரத்து வாய்க்கால் மாயம்: சாலையை அரித்து செல்லும் மழை நீர்

பானாம்பட்டு நீர் வரத்து வாய்க்கால் மாயம்: சாலையை அரித்து செல்லும் மழை நீர்

விழுப்புரம்: விழுப்புரம் பகுதியில், ஏரிநீர் வரத்து வாய்க்கால் துார்ந்து, இருந்த இடம் தெரியாமல் போனது. மழைநீர் வெளியேற வழியின்றி, சாலையை அரித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.தென்பெண்ணை ஆற்றில் இருந்து பிடாகம், ஜானகிபுரம், விழுப்புரம் பெரியார் நகர் வழியாக பானாம்பட்டு ஏரிக்குச் செல்லும் நீர் வரத்து வாய்க்கால் இருந்தது. காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் வாய்க்கால் துார்ந்து போனது.தற்போது அந்த வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாமல் உருக்குலைந்துள்ளது. பருவ மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது.நீர் வரத்து வாய்க்கால் குறுகிப் போனதால், சாலை பகுதியை அரித்து சேதப்படுத்தி, மழை நீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்துடன் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து குடியிருப்புகள் வழியாக வெளியேறி வருகிறது.மழைநீர் வெளியேறுவதற்கான வரத்து வாய்க்காலை மறித்து, தனி நபர்கள் மனைகள் அமைத்து விற்பனை செய்து விட்டனர். தற்போது அந்த வாய்க்கால் தண்ணீர், சுமையா கார்டன் பகுதி சாலையில் வந்து வெளியேறுகிறது. அதிக மழை பெய்யும்போது சாலை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.இந்த பகுதியில் துார்ந்து போன வரத்து வாய்க்காலை சீரமைத்திட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழைக் காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த பிரச்னை குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, சில ஆண்டுகளுக்கு முன், வாய்க்கால் துார் வாருவதற்காக அரசு நிதி ஒதுக்கியது. அதன் மூலம் பானாம்பட்டு ஏரி நீர் வரத்து வாய்க்கால் துார் வாரப்பட்டது. அரசு தரப்பில் புதிதாக நிதி ஒதுக்கீடு செய்ததும், அந்த வாய்க்கால் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை