உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தார் சாலை கோரி மக்கள் நாற்று நட்டு போராட்டம்

தார் சாலை கோரி மக்கள் நாற்று நட்டு போராட்டம்

செஞ்சி: தார் சாலை அமைக்க வலியுறுத்தி சொக்கனந்தல் கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலத்தில் இருந்து சாத்தனந்தல், களத்தம்பட்டு, மல்லாண்டி, மேல்புதுப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மேல்மலையனுார் செல்லும் தார் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் பிறகு சாலை புதுப்பிக்கப்பட வில்லை. இதனால் தார் சாலை முழுவதும் சேதமாகி மண் சாலையாகி விட்டது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து செஞ்சி, மேல்மலையனுாருக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இந்த வழியாக செஞ்சிக்கு விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்கின்றனர். சாலை பழுதானதால் இந்த வழியில் அவசரத்திற்கு ஆம்புலன்சுகளும் செல்ல முடிவதில்லை. இது குறித்து பொது மக்கள் பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர். அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் சொக்கனந்தல் கிராம மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !