வெள்ள நீரை அகற்றாததால் விழுப்புரத்தில் மக்கள் மறியல்
விழுப்புரம்:விழுப்புரம், கிழக்கு பாண்டிரோடு ஆசிரியர் நகர், நேதாஜி நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் பெஞ்சல் புயல் கனமழையின் போது, குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர், வடிகால் வசதியின்றி 10 நாட்களாக தேங்கியுள்ளது.மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை, 10:30 மணிக்கு, கிழக்கு பாண்டி சாலையில் ஆசிரியர் நகரில் மறியலில் ஈடுபட்டனர்.மக்கள் கூறுகையில், 'பத்து நாட்களாக சாலை இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. தினமும் இடுப்பளவு நீரில் செல்லும் நிலை உள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுவதால், அச்ச நிலை உள்ளது. பல முறை தகவல் தெரிவித்தும் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சு நடத்தினர். பின், ஆசிரியர் நகர் பகுதிக்கு சென்று பார்வையிட்ட தலைவர், மழை நீரை வெளியேற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார். மக்கள் மறியலை கைவிட்டனர்.