தொடர் புகார்களால் தள்ளாடும் டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்து வசூலை தக்க வைக்க திட்டம்
விழுப்புரத்தில் தொடர் புகாருக்குள்ளாகி வரும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளதால், அதன் வசூலை தக்க வைக்க இடத்தை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், 106 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. ஆரம்பத்தில்130 கடைகள் வரை இருந்த நிலையில், நெடுஞ்சாலையொட்டி கடைகள், கோவில், பள்ளி, கல்லுாரிகள் அருகே இருந்த கடைகளுக்கு தொடர் எதிர்ப்புகள் வந்ததால், படிப்படியாக குறைக்கப்பட்டன. இந்நிலையில், சில ஆண்டுகளாக கடைகள் மாற்றமின்றி நிரந்தரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், பொது மக்களுக்கு பிரச்னையாக உள்ள கடைகளை மாற்ற வேண்டும் என நீண்டகால கோரிக்கையும் தொடர்ந்துள்ளது. குறிப்பாக, விழுப்புரம் நகரின் மையத்தில் ரயில்வே மேம்பாலத்தின் அருகே பஸ் நிறுத்தம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை எதிர்ப்பையும் மீறி தொடர்கிறது. இந்த டாஸ்மாக் கடையால் பயணிகள் அவதிப்படுகின்றனர். ரயில் நிலையத்திலிருந்து வரும் பலர் இங்கு மது அருந்துவதாலும் அடிக்கடி அப்பகுதியில் தகராறு ஏற்படுகிறது. விழுப்புரம் நகரில் இருந்த 20 கடைகள் வரை அகற்றி, புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டும், ஆளும் கட்சியினர் ஆதிக்கத்தால், இந்த கடை மட்டும் அகற்றாமல் உள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதே போல், விழுப்புரம் புறநகர் பகுதி ஜானகிபுரத்தில் ஒரே இடத்தில் 4 கடைகள் நீண்டகாலம் இயங்கி வருகிறது. அதில் ஒரு கடை மட்டும் மூடப்பட்டு 3 கடைகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. புறவழிச்சாலை சந்திப்பில், ரயில்பாதை அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த டாஸ்மாக் கடைகளால் ஏராளமானோர் குடிப்பதற்கு திரண்டு வருவதால் திருட்டு சம்பவங்களும், மோதல், கொலை சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த மாதம் அங்கு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதனால், அந்த கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஜானகிபுரம், விழுப்புரம் ரயில்வே பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால், அதிக வருவாய் தரும் இந்த டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, உடனே மாற்று இடங்களில் அதிகளவில் வசூல் கிடைக்கும் இடமாக பார்த்து மீண்டும் கடைகளை திறக்கும் பணிகளில் டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட் டுள்ளது.