உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதிகரிக்கும் திருட்டு சம்பவங்களால் போலீசார். திணறல்: கிரைம் தனிப்படை அமைக்க நடவடிக்கை தேவை

அதிகரிக்கும் திருட்டு சம்பவங்களால் போலீசார். திணறல்: கிரைம் தனிப்படை அமைக்க நடவடிக்கை தேவை

விழுப்புரம்: விழுப்புரத்தில் கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் தொடர் திருட்டால், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். கிரைம் பிரிவுக்கு தனி டீம் இல்லாததால், போலீசார் திணறி வருகின்றனர்.விழுப்புரம் நகரில், கடந்த சில தினங்களாக, பூட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, விழுப்புரம் சாலாமேடு, பெரியார் நகர், காந்தி நகர், என்.ஜி. ஜி.ஓ., காலனி உள்ளிட்ட பகுதிகளில், அரசு அதிகாரிகள், போலீசார் குடியிருப்பு பகுதியிலேயே திருட்டு நடப்பது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி சாந்தி, 50; போலீஸ் பட்டாலியனில், நிர்வாக அலுவலராக உள்ளார். கடந்த 27ம் தேதி இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பூஜை அறையில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளை போனது.குடியிருப்புகள் மிகுந்த பகுதியில், மாலை நேரத்தில், முன்பக்க கதவை கடப்பாறையால் உடைத்துச் சென்று திருட்டு நடந்தது தெரியவந்தது.இதே போல், நேற்று காலை, விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்த லேப் டெக்னீஷியன் வித்யா, 55; என்பவர் வீட்டில் 8 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய், மற்றும் வெள்ளி பொருள்கள் கொள்ளைபோனது.கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சாலாமேடு ராமலிங்கம் வீட்டில் பூட்டை உடைத்து 7 சவரன் நகை, 5,000 ரூபாய் கொள்ளை போனது. அதே மாதம் 13ம் தேதி என்.ஜி.ஜி.ஓ., காலனி பகுதியில் ராணி, 50; என்பவரது வீட்டில் 2 சவரன் நகை 10,000 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது. முதல் நாள் 12ம் தேதி பெரியார் நகரில் பள்ளி ஆசிரியர் மைதிலி, 50; வீட்டில் 5 சவரன் நகை, 25 ஆயிரம் ரூபாய்; 4ம் தேதி வழுதரெட்டியில் ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர் ஷேக்அமீர் வீட்டில் 5 சவரன் நகை, சாலாமேடு ஸ்ரீராம் நகர் பகுதியில் சந்திரலேகா, 63; வீட்டில், 8 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் கொள்ளை போனது.ஏற்கனவே, பெரியார் நகர், பாண்டியன் நகரில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த கொள்ளை சம்பவங்களில் நடவடிக்கை எடுக்க முடியாமல் விழுப்புரம் போலீசார் திணறி வருகின்றனர்.ஏற்கனவே ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு கிரைம் போலீசார் டீம் தனியாக இருந்ததால், அவர்கள் இதுபோன்ற திருட்டுகள் மீது, ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர்.தற்போது, கிரைம் பிரிவில் தனி போலீஸ் டீம் இன்றி, ரெகுலர் போலீசார் விசாரணை நடத்தி வருவதால், திருட்டு சம்பவங்கள் குறித்து, தனி கவனம் செலுத்தி பிடிக்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.எனவே, விழுப்புரம் சப் டிவிஷனில் திருட்டை தடுக்க, தனி கிரைம் போலீஸ் குழுவை ஏற்படுத்த காவல் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை