கார் டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலை
விழுப்புரம் : விழுப்புரத்தில் கார் டிரைவரை ஆன்லைன் மூலம் ஏமாற்றி 2 லட்சம் ரூபாயை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம், பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் மகன் கூடுபாய், 40; கார் டிரைவர். இவரது மொபைல் போனுக்கு கடந்த அக்டோபர் 1ம் தேதி மர்ம நபர் ஒருவர், வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டவர் தன்னை, ஹன்னா ஸ்மித் என்ற பெண் எனவும், இங்கிலாந்தில் வசிப்பதாக கூறி நண்பராக பழகியுள்ளார்.அப்போது, கூடுபாய் பெயருக்கு 50 ஆயிரம் யு.கே., பவுண்ட்ஸ், வாட்ச், ஐ போன் மற்றும் தங்க நகைகளை கூரியர் மூலமாக பார்சல் அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, கூடுபாயின் மொபைல் போனுக்கு வேறு ஒரு மொபைல் எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசிய நபர், தான் டில்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், கூடுபாய் பெயரில் வந்துள்ள பார்சலை பெற டெலிவரி கட்டணம் மற்றும் கஸ்டஸ் கிளியரன்ஸ் ஆகிவற்றிற்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதை உண்மையென நம்பிய கூடுபாய், 'ஜிபே' மூலம் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 2 லட்சத்து 201 ரூபாய் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, கூடுபாய்க்கு பரிசு பொருளை அனுப்பாமல் மேலும் பணம் கேட்டபோது தான், பணத்தை இழந்த விபரம் கூடுபாய்க்கு தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, கூடுபாய் நேற்று விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.