உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் விழுப்புரத்தில் தயாரிப்பு தீவிரம்

பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் விழுப்புரத்தில் தயாரிப்பு தீவிரம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நிலையிலும், பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தாண்டு வரும், 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டில் பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கிராமத்தில் பாரம்பரியமாக மண்பாண்டங்களை தயார் செய்யும், தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த, 25 குழுவினர், நீண்ட காலமாக விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலை தயாரிப்பு பணியில் அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பாம்பே விநாயகர், கற்பக விநாயகர், ராஜகணபதி, பசு, எலி, சிம்மம், தாமரை வாகன விநாயகர் சிலைகள் என விதவிதமான சிலை தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால், விநாயகர் சிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சிலை தயாரிக்கும் சிவராஜ், மல்லிகா கூறியதாவது: ஜனவரியில் இருந்து சிலை தயாரிக்கும் பணி நடக்கிறது. 'வாட்டர் கலர்' கொடுத்து பிரம்மாண்ட சிலைகள் தயாரிக்கிறோம். முதலில் களி மண் மூலம் சிலைக்கான அச்சு தயாரித்து, பிறகு மரவள்ளி மாவு, பேப்பர் கூழ் மூலம் சிலையின் பாகங்கள் தயாரிக்கப்படும். அதனை உலர்த்திய பிறகு, சிலையின் பாகங்களை இணைத்து, நேர்த்தியாக மாவு பூசி வடிவமைத்து தயார்படுத்தப்படுகிறது. இந்தமாதம் தொடக்கத்திலிருந்து, கர்நாடகா, ஆந்திரா, கேரளா பகுதிகளுக்கு சிலையின் பாகங்களை தயாரித்து அனுப்பி வருகிறோம். கடைசி 20 நாட்களில் தான் உள்ளூருக்கான சிலைகள் தயாரிப்போம். தற்போது தொடர்ந்து 10 நாட்களாக மழை பெய்வதால், சிலை தயாரிக்கும் பணிகள் பாதித்துள்ளன. அடுத்த வாரங்களில் சிலைகள் தயாராகி, இறுதி வடிவம் பெற்று விற்பனை செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை