எல்லீஸ் அணையில் மூழ்கி தனியார் பள்ளி மாணவர் பலி
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே எல்லீஸ் அணையில் குளித்த தனியார் பள்ளி மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். விழுப்புரம், பானாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விமல் மகன் சுஜித் (எ) அஜய், 14; விழுப்புரம் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் மாலை 4:00 மணியளவில் சக நண்பர்களுடன் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டிற்கு சென்று குளித்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுஜித் நீரில் மூழ்கினார். அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். உடன் அங்கிருந்த வாலிபர்கள் தண்ணீரில் இறங்கி 30 நிமிடங்களுக்கு மேலாக தேடி 5:30 மணியளவில் சுஜித் என்கிற அஜயை மீட்டபோது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது. திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி சம்பவ இடத்திற்குச் சென்று மாணவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.