அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம், பணிமனையில் இருந்து காலை நேரத்தில் கரடிப்பாக்கம், மேலமங்கலம், செம்மார் வழியாக மாரங்கியூர் கிராமத்திற்கு அரசு பஸ் சென்று வருவது வழக்கம். கடந்த இரு தினங்களாக அந்த கிராமத்திற்கு பஸ்கள் செல்லாததால் பள்ளி மாணவர்கள், வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்கள் அவதியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த செம்மார் கிராம மக்கள் நேற்று காலை 8:40 மணியளவில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, உறுதி அளித்து, பஸ்சை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.