ஆர்.டி.ஒ., அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்
விழுப்புரம்: இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி, விழுப்புரத்தில் இந்திய கம்யூ., (மார்க்சிஸ்ட்) கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு சங்கரன் தலைமையில் நிர்வாகிகள், தென்னமாதேவி கிராம மக்கள், நேற்று காலை 11:00 மணிக்கு, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆர்.டி.ஓ., முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தென்னமாதேவி கிராமத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கியதன் பேரில், 14 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பட்டா வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். உடனே இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். இங்கு வசிக்கும் 75 பேருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை பரிசீலனை செய்து துரிதமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனையேற்று 12:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.