சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல் விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் விழுப்புரத்தில் சாலை சீரமைக்க வலியுறுத்தி, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம், 37வது வார்டுக்குட்பட்ட ராகவன்பேட்டை பகுதியில், சாலைகள் சேதமடைந்துள்ளது. குறிப்பாக விநாயகர் கோவில் தெரு, அண்ணா வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்டதால் ஏற்பட்ட பள்ளம் நீண்டகாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி சகதியில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை 9:15 மணிக்கு, விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார், மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து, நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், பொது மக்கள் 9:45 மணிக்கு மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால், விழுப்புரம் - புதுச்சேரி சாலையில், போக்குவரத்து பாதித்தது.