நுாறுநாள் வேலையில் முறைகேடு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வானுார்: நுாறுநாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி, கிராம மக்கள் வானுார் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வானூர் ஒன்றியத்திற்குட்பட்ட தென்னகரம், கீழ்கூத்தப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை நடந்து வருகிறது. இதில், ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 3;00 மணிக்கு, அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென வானுார் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.அதில், பணித்தள பொறுப் பாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஒன்றிணைந்து, தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் 15க்கும் மேற்பட்டோரை, நூறு நாள் வேலைக்கு வந்ததாக கணக்கெடுத்து வருகை பதிவேட்டில் பதிவு செய்து, முறைகேடு செய்து வருவதாகக்கூறியும், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அவர்களிடம் வானுார் பி.டி.ஓ., தேவதாஸ் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.