பா.ம.க.,வினருக்கு பாதுகாப்பு : ராமதாஸ் தரப்பு எஸ்.பி.,யிடம் மனு
விழுப்புரம்: விழுப்புரம் பா.ம.க., மத்திய மாவட்ட செயலர் புகழேந்தி, தலைவர் ஸ்டாலின், வடக்கு மாவட்ட செயலர் பெருமாள், தலைவர் கோபால், அமைப்பு செயலர் அய்யனார் உள்ளிட்டோர் தலைமையிலான நிர்வாகிகள், நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் பா.ம.க., துணை பொதுச்செயலர் அருள் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் சேலம் அருகே ஒரு கிராமத்திற்கு, கட்சி நிர்வாகி வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது, மத்துார் தரைப்பாலம் பகுதியில், ஆத்துார் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் தலைமையில் அன்புமணி ஆதரவு தரப்பினர், கடும் ஆயுதங்களுடன் வந்து, அருள் எம்.எல்.ஏ., மற்றும் அவர்களுடன் வந்த கார்களை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகள் மீது, இதே போல், தாக்குதல் நடத்த, ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அருள் எம்.எல்.ஏ., மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விழுப்புரம் மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் மீது, அன்புமணி ஆதரவாளர்கள் எவ்வித தாக்குதல்களும் நடத்தாமல், பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.