ராமதாஸ் ஆதரவாளர்கள் அன்புமணி படத்தை புறக்கணித்து விளம்பரம்
பா .ம.க.,வில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனான அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதின் விளைவாக, அன்புமணியை கட்சியை விட்டு நீக்கும் அளவிற்கு சென்றது. இதற்கிடையில் செயல் தலைவராக ராமதாசால் நியமிக்கப்பட்டிருந்த அன்புமணி அந்த பதவியை ஏற்காததால், அவருக்கு பதிலாக தன்னுடைய மூத்த மகளான ஸ்ரீகாந்தியை, பா.ம.க.,வின் மாநில செயல் தலைவராக சில நாட்களுக்கு முன் ராமதாஸ் நியமித்தார். ஸ்ரீகாந்தியை முன்னிலைப்படுத்தும் வகையில், ராமதாசுக்கு நன்றி தெரிவிக்கும் விளம்பரங்களை, ராமதாஸ் ஆதரவாளர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைத்திருந்தனர். வழக்கமாக, ராமதாஸ் - அன்புமணி மோதல் உச்ச கட்டத்தில் இருந்த சமயத்தில் கூட இரு தரப்பு ஆதரவாளர்களும், கட்சி நிகழ்ச்சிகளில், ராமதாஸ், அன்புமணி படத்தை போட்டு விளம்பரம் செய்து வந்தனர். ஆனால் ஸ்ரீகாந்திக்கு பதவி வழங்கியது தொடர்பாக திண்டிவனம் உள்ளிட்ட பல இடங்களில் அன்புமணி படத்தை தவிர்த்து ராமதாசுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ராமதாஸ் படத்தை போட்டு கட்சி நிர்வாகிகள் பலர் விளம்பரம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.