விவசாயிகள் அடையாள எண் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்க கோரிக்கை
மயிலம் : விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் அடையாள எண் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்ட பலன்களை பெற தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற வசதியாக அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திடவும் மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைப்படி, தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி விவசாயிகளுக்கு அடையாள எண் கணினி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இ சேவை மையங்களுக்கு நேரடியாக சென்றும் விவசாயிகள் தங்கள் நில உடைமை விபரங்கள், ஆதார் எண், தொலைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி பதிவு செய்து வருகின்றனர்.விவசாய அடையாள எண் பதிவு செய்ய கடைசி நாள் வரும் 31ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சில விவசாயிகள் கிராமத்தில் உள்ள நிலத்தை விட்டு பல்வேறு பணிகளுக்காக வெளியூர் சென்ற பலர் இதில் விடுபட வாய்ப்புள்ளது. மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.அனைத்து விவசாயிகளும் 31ம் தேதிக்குள் பதிவு செய்வது சாத்தியமில்லை. அதனால், பதிவு செய்வதற்கான கால அவகாச தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.